மதுரை: வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபயணம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்தி, அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்கவும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக் கோரி உடன்குடி முதல் காயல்பட்டினம் வரை நாம் தமிழர் கட்சி சார்பில் மார்ச் 18-ல் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையால் நடை பயணம், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது” என்றார்.
இதையடுத்து நீதிபதி, வட மாநில தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தமிழக அரசின் வரன்முறைக்கு உட்பட்டது இல்லை. இதனால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.