புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6, 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளை வரும் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது. 2011ல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
6ம் வகுப்பில் இருந்து சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை. இதனால், 5ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணவர்கள் வேறு வழியின்றி 6ம் வகுப்பில் இருந்து தமிழக பாடத்திட்டத்தை படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய அரசு, 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தி வந்தது.
இதற்கிடையே, மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி முறையான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியிலும் புதிய கல்விக்கொள்கை அமலாகவுள்ளது. ஆனால் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உள்ளது. இதனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை 6ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்திட புதுவை அரசு முடிவு செய்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமலாக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகிறது.
இதனையொட்டி, இந்த கல்வி ஆண்டில் 6ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளையும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற விண்ணப்பிக்க அறிவுறுத்தினார். புதுச்சேரியில் கல்வித்தரத்தை மேலும் உயர்த்த அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநரகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் சிபிஎஸ்இ இணைப்புக்கு சாராஸ் போர்ட்டல் சாளரத்தில் விண்ணப்பிக்க தெரிவித்திருந்தோம். அரசு பள்ளிகள் அனைத்தும் விண்ணப்பித்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யாக மாற திட்டமிட்டு பணியாற்றுகிறோம்” என்றனர்.
128 அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்: கல்வியமைச்சர்
சிபிஎஸ்இ எப்போது அமல்படுத்தப்படும் அதற்கான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று கல்வியமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, ” கடந்த ஆட்சியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது. தற்பொழுது 6 முதல் 12 வகுப்பு வரை சிபிஎஸ்இ பள்ளி ஆக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதைத்தான் பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் சிபிஎஸ்இ பாடத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும். புதுச்சேரியில் தற்போது 128அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்க கோரியுள்ளோம். மத்திய அரசு அனுமதி தருவதாக தெரிவித்துள்ளனர். 6 முதல் 9ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ-க்கு அனுமதி கிடைத்து வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும். உயர்கல்வியைப் பொருத்தவரை 11ம் வகுப்புக்கும் விரைவில் அனுமதி கிடைத்து, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும். எனினும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டில் அனுமதி கிடைக்கும். அரசு பள்ளிகள் என்பதால் கட்டட வசதிகளில் தளர்வு தர கேட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
தனிக்கல்வி வாரியம் அமையாதா என்று கேட்டதற்கு, “அரசு நிதிநிலையால் தனி கல்வி வாரியம் அமைக்க முடியவில்லை. அதிக நிதி தேவை. அதனால்தான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு செல்கிறோம். முக்கியமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை எதிர்கொள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டம் உதவும்” என்று குறிப்பிட்டார்.