திவாகரன், தினகரன் இருவருக்குமான மோதல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. திவாகரன் மகன் ஜெயாஆனந்த்துக்கும், தினகரனின் தம்பி பாஸ்கரனின் மகளுக்கும் நடைபெற்ற திருமணத்தில் கூட தினகரன் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில் டாக்டர் சிவக்குமாரின் இல்ல நிச்சயதார்த்த விழாவில் சசிகலா, தினகரன், திவாகரன் மூன்று பேரும் சேர்த்து கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி சசிகலா குடும்பத்தினரை தாண்டி அவர்களது ஆதரவாளர்கள் தரப்பிலும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. இதற்காக டாக்டர் சிவக்குமார் ரொம்பவே மெனக்கெட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த சசிகலா, தினகரன் இருவரும் பார்த்து கொண்டனரே, தவிர பேசிக்கொள்ளவில்லை. ஏதோ மூன்றாம் நபர்களை போல் இருவரும் வணக்கம் வைத்து கொண்டனர். அருகருகே இருக்கை இருந்தும் ஒன்றாக அமரவில்லை. சசிகலா, திவாகரன், விவேக், தினகரனின் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷ், ஜெயாஆனந்த் உள்ளிட்டோர் ஓர் அணியாகவும், தினகரன், அவரது சம்மபந்தி கிருஷ்ணசாமி வாண்டையார், முன்னாள் தஞ்சை எம்.எல்.ஏ ரெங்கசாமி. எஸ்.காமராஜ் ஓர் அணியாகவும் அமர்ந்திருந்தனர்.