போராடும் விவசாயிகளை கைதுசெய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை தி.மு.க அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. நிலங்களை அபகரித்து நெய்வேலி நிறுவனத்திற்கு அளிப்பதற்காக தி.மு.க அரசு காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்வது எதேச்சதிகாரபோக்காகும்.

- Advertisement -
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தொடங்குவதற்காகத் தங்கள் நிலங்களை விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், பயிற்சி முடித்த தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், தமிழர்கள் வெறும் கூலிகளாகவும், நெய்வேலி நிறுவனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.