சென்னை: சென்னையில் உள்ள உட்புற சாலைகளை ரூ.137 கோடி செலவில் சீரமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் மெட்ரோ ரயில் பணி, மழைநீர் வடிகால் பணி, மின் கேபிள் புதை வட பணி, குடிநீர் வடிகால் பணி உள்ளிட்ட பல்வேறு சேவை துறை பணிகளால் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பருவமழையின்போதும், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணியை மாநகராட்சி துவங்கி உள்ளது. நிபந்தனைகள்:
- சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு முன் இடையூறு இருந்தால், கள ஆய்வு செய்து சரி செய்திட வேண்டும்.
- பணிகள் துவங்கும் முன், தடுப்பு வேலிகள் அமைத்து, போக்குவரத்து மாற்றம் செய்திருக்க வேண்டும்.
- சாலையை அகழ்ந்தெடுத்து, சாலையின் ஆழத்தையும், அமைக்கப்பட்ட சாலையின் உயரத்தையும் சரி பார்த்திட வேண்டும்.
- தார்க் கலவையின் தரம் மற்றும் அதன் பேக்கிங் தேதி சரிபார்ப்பதுடன், கலவை சீராக பிணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியம்
- தார்ச்சாலை அமைத்து அதன் மீது அதன்மீது அழுத்தம் தரும் இயந்திரத்தின் வேகம் 5 கி.மீ., அளவில் இருக்க வேண்டும். மேலும், தார்சாலை கலவையின் வெப்பம் 90 டிகிரி செல்சியஸ் ஆவதற்கு முன், அமைத்து உருளையிட வேண்டும்.
இதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதியின் மூலம் 68.70 கோடி ரூபாய் மதிப்பில் 125 கி.மீ., நீளத்திற்கு பேருந்து சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், 104 கோடி ரூபாய் மதிப்பில் 101 கி.மீ., நீளத்திற்கு என, மொத்தம் 172.70 கோடி ரூபாய் மதிப்பில் 1,110 சாலைகள் 226 கி.மீ., நீளத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சாலை பணிகளை கண்காணிக்க, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், துணை கமிஷனர்கள், தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
- மண்டலம் – சாலை எண்ணிக்கை – சாலை கி.மீ., – மதிப்பீடு (ரூ)
- ராயபுரம் – 45 – 4.7 – 3.56 கோடி
- திரு.வி.க.நகர் – 378 – 4.8 – 41.12 கோடி
- கோடம்பாக்கம் – 136 – 27.5 – 16.69 கோடி
- வளசரவாக்கம் – 587 – 81.3 – 51.73 கோடி
- ஆலந்துார் – 236 – 31.3 – 23.97 கோடி
- மொத்தம் – 1,382 – 119.6 – 137.13 கோடி
இதனைத் தொடர்ந்து, 1,382 உட்புற சாலைகள் சீரமைப்பதற்கான பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் சாலை சீரமைப்பு பணிகள், இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் நடைபெறும்போது, பொறியாளர்கள் அல்லது அதிகாரிகள் தரத்தை ஆய்வு செய்கின்றனர்.
தற்போது உட்புற சாலைகளை சீரமைக்கும் பணியை துவங்கி உள்ளோம். அதன்படி, 119.6 கி.மீ., நீளமுடைய உட்புற சாலைகள், 137.13 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க டெண்டர் கோரியுள்ளோம். 78 தொகுப்புகளாக சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. டெண்டர் பணிகள் முடிவடைந்த பின்பு உடனடியாக சாலை பணிகள் துவங்கப்பட்டு, விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.