கோவை: நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்தார்.
வணிக வழக்குகள் விசாரணைக்காக கோவை காந்திபுரம் சீனிவாசபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூகநலக் கூடத்தில் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ள சார்பு நீதிமன்றங்கள் மற்றும் அன்னூரில் மாவட்ட முன்சீப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை அகாடமி வளாகத்தில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது பழமையான நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் 125-வது ஆண்டு விழாவின் போது அப்போதைய மத்திய சட்டத்துறை அமைச்சர், சிவில், கிரிமினல் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தெரிவித்து பாராட்டினார்.
- Advertisement -
இந்தியாவில் அலகாபாத் நீதிமன்றம் தான் பெரிய நீதிமன்றம். 160 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இருப்பினும் அங்கு 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ஆன வழக்குகள் தீர்வு காணப்படாமல் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நிலுவை வழக்குகளே இல்லை என்ற சாதனை படைக்கப்பட்டது.
தற்போது கூட சில ஆண்டுகளேயான வழக்குகள் தான் நிலுவையில் உள்ளன. இந்த பெருமை அனைத்தும் நீதித்துறை ஊழியர்களுக்கும் சேரும். கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் கடந்த 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரை தேசிய அளவில் சிவில், கிரிமினல் வழக்குகளுக்கு தீர்வு வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது.
நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் காணொலி தொழில்நுட்பம் மூலம் 63 லட்சம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 14 லட்சம் வழக்குகளுக்கு (21 சதவீத பங்களிப்பு) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் பார், பெஞ்ச் இரண்டும் தேரில் உள்ள இரண்டு சக்கரங்களை போன்றவை.
மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இப்பெருமை சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன்களை சேரும். வணிக வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண உதவும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வணிக வழக்குகளுக்கான நீதிமன்றங்கள் முன்மாதிரியாக விளங்கப் போகின்றன.
- Advertisement -
தேசிய அளவில் பெரும்பாலான நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. அன்றைய சூழலிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கும், என்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்திய நாதன், ஆதி கேசவலு, முரளி சங்கர், பரத சக்ரவர்த்தி, கோவை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கலையரசன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். தலைமை நீதித்துறை நடுவர் சுந்தரம் நன்றி கூறினார்.