நாமக்கல்: பணியிட மாறுதல் பெற்ற செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கியதாக, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் அலுவலகம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாநில அளவிலான பணியிட மாறுதல் கலந்தாய்வு, கடந்த 2021 ஜூலை 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற செவிலியர்கள், விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாற்றம் பெற்றனர். இதன்படி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 76 செவிலியர்கள், பல்வேறு ஊர்களுக்குப் பணியிட மாறுதல் பெற்றனர்.
ரூ.35 ஆயிரம் லஞ்சம்: இந்நிலையில், இடமாறுதல் பெற்ற செவிலியர்களைப் பணியில் இருந்து விடுவிப்பதற்காக, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் மூலம், தலா ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாகப் புகார்கள் எழுந்தன.
மேலும், நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ‘கூகுள் பே’ மூலம் லஞ்சப் பணத்தைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் வழங்காத செவிலியர்களைப் பணியில் இருந்து விடுவிப்பதில் காலதாமதம் செய்துள்ளனர் என்றும் புகார்கள் தெரிவிக்கப் பட்டன.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனர். இதில், சுகாதாரத் துறையினர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த பல்நோக்குப் பணியாளர் சக்தி முருகன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.