உதகை: பனியில் இருந்து புல்வெளிகளை காக்கும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் பாப் அப் மூலமாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதிஅல்லது டிசம்பர் மாதம் பனிப்பொழிவு தொடங்கும். ஆரம்பத்தில் நீர் பனிப்பொழிவாகவும், தொடர்ந்து உறை பனிப்பொழிவும் தொடங்கும்.
இதனால் தேயிலை செடிகள், வனங்களில் செடி, கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இந்த முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. ஆரம்பம் முதலே உறை பனிப்பொழிவு கொட்டியது.
இதனிடையே கடந்த மாதம் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது. மேலும், மேகமூட்டமான காலநிலையும் நிலவியது. பனியின் தாக்கம் குறைந்தாலும், நீர் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
உதகை தாவரவியல் பூங்காவிலுள்ள புல்வெளிகள் பாதிப்படையும் நிலை இருந்தது. புல்வெளிகளை பனியிலிருந்து பாதுகாக்க, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் புல் மைதானங்களில் பாப் அப் மூலமாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.